வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், மார்ச் 09, 2015

கிரண் பேடியின் முகமூடி

தில்லியில் தோற்றுவிட்டாலும் அவரைப்பற்றிய பிம்பம் நம் உள்ளத்தில் தவறாக பதியப்பட்டுள்ளது என்பதால் இக்கட்டுரை. தேர்தலோடு இக்கட்டுரையை தொடர்பு படுத்தி பார்க்க வேண்டாம் ஆனால் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அவர் முன்நிறுத்தப்பட்டதால் தான் அவரை பற்றி தெரிந்தது. (தில்லி தேர்தலுக்கு முன்பு எழுத ஆரம்பித்து இப்போது தான் முடித்தேன் அவ்வளவு வேகம்)

கிரண் பேடி தில்லியின் கன்னாகட்டு பிளேசில்அனுமதியற்ற இடத்தில் நிறுத்தியிருந்த பிரதமர் இந்திரா காந்தி பயணம் செய்யும் மகிழுந்தை இழுத்து சென்றார் அதனால் அடுத்த நாளே பழிவாங்கப்பட்டு கோவாவுக்கு மாற்றப்பட்டார் என்று அறிந்திருந்தோம். இதையெல்லாம் கூறியது கிரண் பேடி என்ற கிரண் கேடி தான். தன்னைப் பற்றி இப்படியான உருவகத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். ஊடகங்களும் அதையே இத்தனை நாளும் வெளியிட்டன.

மேற்கண்ட செய்தியை ஏப்ரல் மாதம் 2010இல் போபாலில்  சமூக அறிவியல் பள்ளி மாணவர்களிடம் அவர்களின் இசுபெக்ட்ரம் 2010 நிகழ்ச்சியில் உரையாற்றும் போதும் கூறியுள்ளார்.


ஆனால் இப்போது தான் தெரிகிறது அவர் ஒன்றும் செய்யவில்லை போக்குவரத்து துணை ஆய்வாளர் நிர்மல் சிங் என்பவர் முறையற்ற முறையில் நிறுத்தியிருந்த மகிழுந்துக்கு அபராதம் விதித்தார் என்பது.  அச்சமயத்தில் இந்திரா காந்தி வெளிநாட்டில் இருந்தார். அதுவும் அது பிரதமர் பயணம் செய்யும் மகிழுந்து அல்ல அது பிரதமர் அலுவலக மகிழுந்து (DHI 1817). அங்கு வேலை செய்த யாரோ பயன்படுத்தியுள்ளார்கள். அம்மகிழுந்துக்கு தேவையான பொருட்களை அங்குள்ள கடையில் வாங்க நிறுத்தியுள்ளார்கள்.   அதனால் அக்கடைக்கு நிர்மல் சிங் தண்டம் விதித்து சீட்டு கொடுத்துள்ளார். அக்கடையின் பாதுகாவலர் இது பிரதமர் அலுவலக மகிழுந்து என்று கூறியும் தண்டம் விதித்தார் நிர்மல் சிங். நேர்மையான அதிகாரி நிர்மல் சிங்கிற்கு கிடைக்க வேண்டிய புகழை இத்தனை காலமும் அனுபவதித்து வந்துள்ளார். இதுல கொடுமை என்னன்னா உண்மையான செய்தி கிரண் பேடியின் பக்கத்தில் உள்ளது ஆனால் எல்லோரும் அப்பக்கத்தை பார்க்காமல் கிரண் பேடி கூறியதையே நம்பினர். கிரண் பேடி கூட அவர் பக்கத்தை பார்க்காத போது அடுத்தவர்கள் பார்க்கனும் என்பது சரியல்ல :). இப்போது இவர் தளம் மீளமைக்கப்பட்டதால் பழைய செய்தி கண்ணுக்கு தட்டுப்படவில்லை. இப்போது இவர் கடையில் டீ போடுகிறார்கள். நடக்கட்டும்.

இது நடந்தது ஆகத்து 1982இல். கிரண் பேடி கோவாவுக்கு மாற்றப்பட்டது 1983 மார்ச்சில். கோவாவில் பணியிலிருந்த இவர் விடுப்பு கடிதம் கொடுத்து விட்டு (விடுப்பு ஏற்படவில்லை) தில்லிக்கு ஓடி வந்துவிட்டார்.
மகளுக்கு உடல் நிலை மோசமடைந்ததால் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு உடனடியாக தில்லி வந்தார். நிருவாக ரீதியாக அதாவது சட்டப்படி இது தவறு என்றாலும் உணர்வு வழியில் இது சரி. ஆனால் இதற்கு நேர்மாறாக மிசோரமில் நடந்தார்.

காங்கிரசு அரசு இவரை பழிவாங்கும் விதமாக நடந்துகொண்டதால் தான் இவருக்கு பாசக மேல் அன்பு பொங்குகியது என்பதும் வடிகட்டிய பொய். இவருக்கு காங்கிரசு அரசாங்கம் இக்கட்டான நேரங்களில் உதவியுள்ளது. இவர் முறையற்ற முறையில் வழக்கறிஞர்கள் மேல் தடியடி நடத்தியதை அது பற்றி விசாரித்த விசாரணை ஆணையமும் (வாத்வா ஆணையம்) கண்டித்துள்ளது. குற்றம் செய்த வழக்கறிஞரை தண்டித்தது சரி என்றும் ஆனால் எல்லா வழக்கறிஞர்கள் மேலும் தடியடி நடத்தியது தவறு என்றும் கூறியது. இவருக்கு தில்லியில் பெரிய பதவி தரக்கூடாது என்றும் அது கூறியது. இவரை மாற்ற வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை இராசீவ் காந்தியின் அரசில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த பூட்டா சிங் மறுத்துவிட்டார். இவருக்கு பாசக மேல் அன்பு பொங்கியது தவறில்லை அதற்கு காங்கிரசு அரசு பழிவாங்கும் விதமாக நடந்துகொண்டது தான் காரணம் என்பது இவருக்கு அழகல்ல.

1992ஆம் ஆண்டு மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட இவர் தன் மகளுக்கு அம்மாநில ஒதுக்கீட்டில் டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்றார். சட்டப்படி இதில் தவறு இல்லை என்றாலும் அவ்வொதுக்கீடு மிசோரம் மாநில மலை வாழ் மக்களுக்கானது. சட்டத்தின் ஓட்டையை தனக்காக பயன்படுத்தினார்.  மிசோரம் மாநில தலைமைச் செயலரும் அம்மாநில ஒதுக்கீட்டில் கிரண் பேடி தன் மகளுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் தவறில்லை என்றாலும் பொது நலன் கருதி அவ்வொதுக்கீட்டை பயன்படுத்தாமல் மிசோரம் மக்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை பேடி ஏற்றுக்கொள்ளவில்லை. மிசோரம் இடவொதுக்கிடை இவர் பயன்படுத்தியதால் மிசோராமில் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  மிசோரம் அரசும் இவர் மிசோரமில் இருப்பது ஆபத்து என்றும் இவருக்கும் இவர் குடும்பத்தாருக்கும் 24 மணிநேரமும் பாதுகாப்பு தருவது இயலாத செயல் என்றும் இவருக்கு எதிராக குற்றம் நடக்கலாம் என்று கூறியதால் அம்மாநில நிருவாகத்தின் அறிவுரைப்படி அங்கிருந்து வந்துவிட்டார்.


கருத்துகள் இல்லை: